Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

to KV: Karuna's interview part 2

Go down

to KV: Karuna's interview part 2 Empty to KV: Karuna's interview part 2

Post by Rishi Thu Jun 13, 2013 9:54 pm

கேள்வி: புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் இன்னமும் தமிழீழ கோரிக்கையைக் கைவிடவில்லையே? 

பதில்: புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்தே பழைய நினைப்பில் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. இங்கு வந்து பார்க்க வேண்டும். போருக்குப் பிறகு, பல புலம் பெயர்ந்த தமிழர்கள் இங்கு திரும்பி வந்துள்ளனர். அவர்கள் இங்கேயே தொழில் செய்யவும் துவங்கியுள்ளனர். இதை நான் வரவேற்கிறேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் மிக நுட்பமான அறிவு பலத்துடன், ஏராளமான பண பலத்துடன் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் இங்கு திரும்பி வரவேண்டும். இங்கு தொழில் செய்து, இங்குள்ள தமிழர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். வசதியோடு இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள், ஆளுக்கு ஒரு வீடு கட்டித் தர முன் வந்தாலே, இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவ வேண்டிய தேவையே இராது. அவ்வளவு பேர் வசதியாக வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையில் இங்குள்ள தமிழர்களுக்கு உதவ நினைத்தால், பொருளாதார ரீதியில் உதவ வேண்டும். அவர்கள் வசிக்கும் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவதால், ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. மாறாக, இங்குள்ள மக்கள் மீது குரோதம்தான் வளரும். 


கேள்வி: போர் முடிந்து நான்காண்டுகள் ஆகியும் இன்னும் ராணுவ நெருக்கடி தொடர்ந்து இருப்பதான குற்றச்சாட்டு பற்றி? 

பதில் : தேசியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் வட, கிழக்குப் பகுதிகளில் மட்டுமில்லாமல், இலங்கையின் பல பகுதிகளிலும் ராணுவம் இருக்கிறது. இந்தியாவில் தமிழகத்தில் கூட சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் ராணுவம் இருக்கிறது. நாகப்பட்டினத்தில் கப்பல் படைத் தளம் இருக்கிறது. இது மக்களின் உரிமையைப் பறிப்பதாகாது. இங்கு படிப்படியாக ராணுவம் விலக்கப்படும். இந்த நான்கு வருடத்தில் எவ்வளவோ விலக்கப்பட்டிருக்கிறது. பல முகாம்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்திலும், புலம் பெயர்ந்த தமிழர்களிடத்திலும் மீண்டும் ‘ஈழ’ கோஷம் எழுவதால், எந்த அரசாங்கத்துக்கும் சந்தேகம் எழவே செய்யும். மீண்டும் புலிகள் வந்து விடுவார்களோ, ஆயுதப் போராட்டம் உருவாகி விடுமோ என்ற ஐயப்பாடு கிளம்பவே செய்யும். எனவேதான் மீண்டும் ‘தமிழீழம்’, ‘பதிலடி’ என்றெல்லாம் குரல் எழுப்ப வேண்டாமென்று தமிழக மக்களையும், புலம் பெயர்ந்த தமிழர்களையும் கேட்டுக் கொள்கிறேன். அதனால் இங்குள்ள தமிழர்களின் சுதந்திரம் தான் பாதிக்கப்படும். 

கேள்வி: நீங்கள் வெளியே வராமல் இருந்திருந்தால், ஈழம் கிடைத்திருக்கும் என்று பேசப்படுகிறது. நீங்கள்தான் வெளியே வந்து, புலிகளின் ரகசியங்களை எல்லாம் அம்பலப்படுத்தி விட்டீர்கள் என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்களே? 

பதில்: ‘காட்டிக் கொடுத்தேன், ரகசியங்களை அம்பலப்படுத்தினேன்’ என்பதெல்லாம் பொய்க் கதை. நான் இயக்கத்தில் இருந்தபோது, பல ராணுவ நடவடிக்கைகளை முறியடித்து பல பெரிய வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறேன் என்பது உண்மை. குறிப்பாக, ஆனையிரவைக் கைப்பற்றியதெல்லாம் புலிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஆபரேஷன் என்று கருதப்பட்ட அந்த ராணுவ நடவடிக்கைகளை முறியடித்ததில் நான் பெரும் பங்கு வகித்தேன். ஆனால், நான் வெளியே வராமல் போயிருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். நானும், எனது ஆதரவாளர்களும் வெளியேறாமல் இருந்திருந்தால், இன்னும் பல ஆண்டுகள் சண்டை வேண்டுமானால் நீடித்திருக்கலாம். ஆனால், ஈழம் என்றுமே கிடைத்திருக்காது. 

ஆரம்பத்தில் இயக்கத்தில் மக்கள் விரும்பிச் சேர்ந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில், கட்டாயமாக ஆள் பிடிக்க ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. எந்த ஒரு போராட்டமும் வெல்வதற்கு மக்களின் ஆதரவு வேண்டும். ஆனால், எந்தக் குடும்பமும் தன் கணவனோ, மகனோ, தந்தையோ போரில் ஈடுபட்டுச் சாவதை விரும்பாது. ஆனால், புலிகள் அதைக் கட்டாயப்படுத்தினார்கள். ஆண்கள் குறைந்தபோது, பெண்களையும் ராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்த்தார்கள். இதனால் மக்கள் விரக்தியடைந்தனர். அந்த நேரத்தில்தான் நார்வே, சமரசத்திற்கு வந்தது. நான் பிரபாகரனிடம் பேசினேன். ‘இதுவரை ராணுவ வெற்றிகளைத்தான் பெற்று வருகிறோம். இதை அரசியல் வெற்றியாக மாற்றி கொள்ள நாம் முன் வரவேண்டும். ராணுவ வெற்றியை வைத்து நாம் என்ன செய்ய முடியும்? அரசாங்கம் மேலும் பிற நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொண்டு மீண்டும் போருக்கு வரும். திரும்பவும் சண்டைதான் போட வேண்டும். என்றைக்கும் நிம்மதியோ, விடுதலையோ இருக்கப் போவதில்லை. எனவே, அரசியல் தீர்வுக்கு போவோம்’ என்று சொன்னேன். ஆனால், அவர் ‘தனி நாடு’ என்ற சிந்தனையை விட்டு வெளியே வரவில்லை. 

இங்கு பல்கலைக் கழகப் படிப்புக்குத் தேர்வாவது மிகப் பெரிய விஷயம். நான் அதற்குத் தேர்வானேன். ஆனால், அங்கு சேருவதற்கு முன்பாக, புலிகள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்து விட்டேன். சேரும்போது என் எண்ணம் என்னவாக இருந்தது என்றால், ‘ஒரு நான்கைந்து ஆண்டுகள் போராடினால் தமிழீழம் கிடைத்து விடும். அதன் பிறகு படிப்பு, வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்பதுதான். ஆனால் 25 ஆண்டுகள் போராடியும் தீர்வோ, வெற்றியோ கிடைக்கவில்லை என்ற போது, சலிப்புதான் வந்தது. மக்களும் புலிகளுக்கு எதிராக மாறத் துவங்கினார்கள். உலக நாடுகளும் புலிகளுக்கு எதிராக மாறின. இந்தியாவும் புலிகள் ஆதரவை விலக்கிக் கொண்டது. முதல் சந்ததி முடிந்து, இரண்டாவது சந்ததி உயிர்களை இழக்கத் துவங்கியாகி விட்டது. புலிகள் மூன்றாவது சந்ததியையும் அழிக்காமல் விட மாட்டார்கள் என்று தோன்றியது. தனிநாடு சாத்தியமில்லை என்பதைப் புரிந்து, தனது வெற்றிகளை அரசியல் வெற்றியாக மாற்ற புலிகள் உடன்படாததால்தான் நான் வெளியேறினேன். 

கொஞ்சம் விமர்சித்தாலும் அவரைத் துரோகி என்று முத்திரை குத்துவதோடு, அவரைக் கொலை செய்யவும் புலிகள் தயங்கவில்லை. ஏராளமான தமிழ்த் தலைவர்களை அந்த இயக்கம் கொன்று போட்டது. திம்பு பேச்சுவார்த்தையில் இந்திய அரசு, ‘எல்லா தமிழ்த் தலைவர்களும் இணைந்து செயல்படுங்கள். பெரிய வெற்றி கிடைக்கும்’ என்று அறிவுரை கூறியது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத புலிகள், அத்தனை சக இயக்கத்தினரையும் கொன்று குவித்தனர். சகோதரப் போராளிகளைக் கொன்று குவிப்பதை, புலிகளின் தளபதிகள் பலரே ஏற்கவில்லை. மக்கள் மத்தியிலும் அது புலிகளின் பெயரைக் கெடுத்தது. பிரபாகரனுக்குக் கிடைத்த குறுகிய கால வெற்றிகள் அவரை மதி மயக்கி விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். நான் யதார்த்த நிலையை உணர்ந்து வெளியேறினேன். 


இன்று சிங்கள மக்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்களோ, அதே சுதந்திரத்துடன் தமிழர்களும் வாழ வேண்டும் என்பது மட்டும்தான் எனது இலக்காக உள்ளது. தனிநாடு என்று பேச ஆரம்பித்தால், அது இங்குள்ள மக்களுக்கு நலன் பயக்காது. 

கேள்வி: இலங்கை ராணுவம், தமிழர் நிலங்களைக் கைப்பற்றி வைத்துக் கொண்டதாக ஒரு பெரிய குற்றச்சாட்டு கூறப்படுகிறதே? 

பதில்: இலங்கை காணிச் சட்டப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலங்களின் விபரம் அரசு ஏஜென்டிடம் (கலெக்டர்) உள்ளது. அதை மீறி, ஒரு துண்டு நிலத்தைக் கூட யாரும் யாருக்கும் கொடுத்து விட முடியாது. அப்படிப் பிடுங்கிக் கொடுத்தாலும் கூட, அவர் நீதிமன்றத்திற்குச் சென்று ஜெயித்து விட முடியும். எனவே, நிலங்கள் பறிபோவதாகச் சொல்வது பொய். கண்ணி வெடிகள் இருக்கும் பகுதி இன்னமும் ராணுவக் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அங்கு பணிகள் முடிந்த பிறகுதான், நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியும். அதே போல், ராணுவ முகாம்கள், தொழிற்திட்டங்கள், புதிய சாலை வசதிகள், மின் திட்டங்கள் போன்ற அபிவிருத்தி மற்றும் நாட்டுத் நலத் திட்டங்களுக்காக ஒரு அரசாங்கம், மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முடியும். அதற்குச் சட்டத்தில் இடம் உள்ளது. 

உதாரணத்திற்கு, கிழக்கு மாகாணத்தில் சாம்பூர் பகுதியில் மூதூர் என்ற இடம் உள்ளது. அங்கு இந்திய அரசாங்கம், இலங்கைக்காக நிலக்கரி அனல் மின் திட்டத்தைச் செய்து தரவுள்ளது. இதற்காக அங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத் தேவை பூர்த்தியாவதுடன், ஆயிரம் பேருக்கு வேலையும் கிடைக்கவுள்ளது. இதுபோன்ற அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் நிலத்தைக் கையகப்படுத்துவது உலகெங்கும் நடப்பதுதானே? 

கேள்வி: வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு போலீஸ் அதிகாரம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசால் ஏற்கப்படும் வாய்ப்புள்ளதா? 

பதில்: இந்திய மாடலில் மாகாண சபை அதிகாரம் என்று பேசும்போது, இங்கும் இந்தக் கோரிக்கை எழுகிறது. இந்தியா ஒரு பெரிய நாடு. அங்குள்ள மாகாண அமைப்பை இங்கு அப்படியே காப்பி அடிக்க முடியாது. இன்று சென்னையில் புறநகரையும் சேர்த்தால், இரண்டு கோடி அளவுக்கு மக்கள் தொகை இருக்கும் என்கிறார்கள். ஆனால், இலங்கையின் மொத்த மக்கள் தொகையே இரண்டு கோடிதான். இங்கே இந்தியாவைப் போல மாகாணத்திற்கு போலீஸ் அதிகாரம் தர இயலாது. அமெரிக்காவில் மேயரிடம் போலீஸ் அதிகாரம் இருக்கிறது. தமிழகத்தில் அது போல் முனிஸிபாலிட்டி அமைப்புகள் கேட்டால் போலீஸ் அதிகாரத்தைத் தர முடியுமா? அதுபோன்ற நிலைதான் இங்கே. 

இலங்கை சிறிய நாடு. குறைந்த மக்கள் தொகை. அதனால் மாகாண சபைக்கு போலீஸ் அதிகாரம் வழங்கி விட முடியாது. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு போலீஸ் அதிகாரம் கொடுத்தால், இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் கொடுக்க வேண்டி வரும். அது நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கக் கூடிய சிக்கல்களை ஏற்படுத்தலாம். கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். எனவே, அது இங்கு சாத்தியப்படாது. அதற்கு என்ன செய்யலாம்? தமிழர்களை போலீஸ் படையில் இணைப்பது, தமிழ் அதிகாரிகளை தமிழர் பகுதிகளில் பணி செய்ய அனுமதிப்பது போன்ற விஷயங்கள் ஒரு நல்ல தீர்வாக அமையும். அதைதான் இப்போது செய்து வருகிறோம். கிழக்கு மாகாணத்திற்கு ஸீனியர் டி.ஐ.ஜி. என்றால் சங்கர் என்ற தமிழர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு டி.ஐ.ஜி. என்றால் இந்திரன். அவரும் தமிழர். 



தமிழர்கள் போலீஸில் சேரும் வகையில் கிழக்கு மாகாணத்தில் போலீஸ் பயிற்சிக் கல்லூரி இயங்குகிறது. இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் அதில் சேர்ந்துள்ளனர். ராணுவத்திலும் தமிழர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாறுதல்களை நாம் வரவேற்று, அதைக் கூடுதலாக்க முயற்சித்து, இந்த தேசத்தில் எல்லோரும் சேர்ந்து அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ, உலகத் தமிழர்கள் உதவி செய்ய வேண்டும். அதற்கு இடையூறு செய்யக்கூடாது. 

ஆரம்பத்தில் ராணுவத்தைப் பார்த்து மக்கள் பயந்தார்கள். இப்போது அந்தப் பயமில்லாமல் வாழ துவங்கி விட்டார்கள். இலங்கையில் ஒட்டு மொத்தமாகத் தமிழ்ப் பேசும் மக்கள் என்று பார்த்தால் 28 சதவிகிதம் பேர் இருக்கலாம். மீதி 72 சதவிகிதம் பேர் சிங்கள மக்கள்தான். 72 சதவிகித சிங்கள மக்களை மீறி, சுமார் 28 சதவிகித தமிழ் மக்களுக்கு எந்த அரசாங்கமும் விசேஷ சலுகைகளை அள்ளி வீசி விடாது. இந்த யதார்த்த உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், படிப்படியாக தமிழருக்கு உரிய உரிமையைப் பெற்று விடலாம். அதற்குச் சாத்திய கூறுகள் நிறைய உள்ளன. தமிழ் மக்களால் ஒரு தமிழ் ஜனாதிபதியைக் கொண்டு வர முடியாது. ஆனால், ஒரு ஜனாதிபதியைத் தீர்மானிப்பதில் தமிழர்கள் பங்கு வகிக்க முடியும். அவர்களை எந்தக் கட்சியாலும் உதாசீனம் செய்ய முடியாது. அந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். 

கேள்வி: இலங்கை அரசு மீது வைக்கப்படும் இன அழிப்புக் குற்றச்சாட்டு குறித்து?

பதில் : இன அழிப்பு என்பது சுத்தப் பொய். சரணடைந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ராணுவம் அழித்து விடவில்லை. மீள் குடியேற்றம் செய்துள்ளது. 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்படவில்லை. வழக்குகளைச் சந்தித்து விட்டு, சுதந்திரமாக வாழ்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் முக்கியப் பிரமுகர் தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இன்று நன்றாக இருக்கிறார்கள். சூசையின் குடும்பத்தினர் நன்கு வாழ்கிறார்கள். 

3 லட்சம் மக்களை, முள்ளிவாய்க்கால் பகுதியில் 20 ஆயிரம் புலிகள் பிடித்து வைத்திருந்தார்கள். அரசாங்கம் மிக நிதானமாகத்தான் சண்டை பிடித்தது. மூன்று லட்சத்து இருபதாயிரம் பேரையும் கொன்று விடவில்லை. முடிந்தளவு மக்களை வெளியேற்றிய பிறகே, புலிகளை அழித்தார்கள். புலிகளிலும் 10 ஆயிரம் பேருக்கு மேல் சரணடைந்தனர். கடைசி நேரத்தில் கூட சரணடையுமாறு புலிகளிடம் வேண்டுகோள் வைத்தார் அதிபர் ராஜபக்ஷ. ஆனால், அவர்கள் கேட்கவேயில்லை. மக்களின் தீர்வுக்காகத்தான் யுத்தம் - மக்களையே தீர்த்துக் கட்டுவதற்கு யுத்தமல்ல என்பதைப் பிரபாகரன் புரிந்து கொள்ளத் தவறி விட்டார். 

தமிழனின் வீரத்தைச் சொல்வதற்காக, ‘தமிழன் வாளோடு பிறந்தவன்’ என்று சொன்னதெல்லாம் போதும். இனி இங்கு பிறக்கும் தமிழன் ‘வாழ்வோடு பிறக்கட்டும்.’ 

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum