தவறு தவறுதானே...
Page 1 of 1
தவறு தவறுதானே...
By தினமணி
First Published : 17 December 2013 03:25 AM IST
அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் துணைத்தூதர்களில் ஒருவரான தேவயானி கோப்ரகடே, விசா முறைகேடு வழக்கில் அந்நாட்டுக் காவல்துறையினரால் பொது இடத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பது, பரவலான கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. தூதரக அதிகாரி ஒருவரை இப்படி பகிரங்கமாகக் கைவிலங்கிட்டு கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று வேண்டுமானால் நாம் கேள்வி எழுப்பலாமே தவிர, அயல்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர், பொறுப்பின்மையுடன் செயல்பட்டிருப்பதற்கு நாம் வக்காலத்து வாங்க முடியாது.
நியூயார்க்கிலுள்ள அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் தேவயானி கோப்ரகடே, வீட்டு வேலைகள் செய்வதற்காக இந்தியாவிலிருந்து அழைத்துச் சென்ற சங்கீதா ரிச்சர்ட் என்கிற பெண்மணி அளித்திருக்கும் புகாரின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாதம் முப்பதாயிரம் ரூபாய் ஊதியமும், வாரத்திற்கு 40 மணிநேரம் மட்டுமே பணி என்றும் சங்கீதாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தேவயானி நடந்துகொள்ளவில்லை என்பது குற்றச்சாட்டு. மேலும், அமெரிக்க விசா பெறுவதற்காக சங்கீதா பற்றிய தவறான தகவல்களை தேவயானி அளித்திருக்கிறார் என்பதும் அவர் மீதான நடவடிக்கைக்குக் காரணம்.
வீட்டுவேலை செய்ய அழைத்துச் செல்லும் ஊழியர்கள் தொடர்பாக இந்தியத் தூதரக அதிகாரிகள் மட்டுமல்ல, பல வெளிநாடுவாழ் இந்தியர்கள் மீதும்கூட பல்வேறு நாடுகளில் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. எங்கும் தப்பித்து ஓடிவிட முடியாத இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரை, அதிலும் பிணையில் விடுவிக்க முடியாத குற்றச்சாட்டுக்கு ஆளாகாத ஒருவரை, கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றது வேண்டுமானால் அதிகப்படியாக இருக்கிறதே தவிர, இந்தப் பிரச்னையில் அமெரிக்க காவல்துறைக்கு நிகரான கண்டனத்தை, நமது தூதரக அதிகாரிக்கும் நாம் தெரிவித்தாக வேண்டும்.
இந்தியாவைப்போல மேலைநாடுகளில் வீட்டு வேலை செய்வதற்கு சுலபமாக ஆள் கிடைத்து விடுவதில்லை. இங்கே நாம் பேரம் பேசி சம்பளம் நிர்ணயிப்பது போலெல்லாம் அங்கே ஆளை அமர்த்திவிட முடியாது. அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தனை மணி நேரம்தான் வேலை வாங்க முடியும் என்கிற வரையறை உண்டு. வீட்டு வேலை செய்பவர்களுக்கும் வயது வரம்பு உண்டு. வீட்டோடு வைத்துக் கொள்கிறோம் என்கிற பெயரில் முழுநேர ஊழியர்களாக யாரையும் வைத்துக் கொள்ள முடியாது என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு வார ஓய்வும், ஆண்டுக்கு இத்தனை நாள்கள் விடுமுறையும் தரப்பட வேண்டும் என்பதும் வீட்டுவேலை ஊழியர்களின் சட்டம்.
இந்த சட்டதிட்டங்களுக்கு உள்பட விரும்பாமல்தான், வெளிநாடுவாழ் இந்தியர்கள் இங்கிருந்து சொந்தக்காரர் என்கிற பெயரில் யாரையாவது வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இங்கிருந்து வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்மணி நன்றாக நடத்தப்படும்வரை பிரச்னை எதுவும் இல்லை. அவர் அடிமைபோல நடத்தப்படும்போது, அதிலும் அவர்கள் சற்று ஆங்கில அறிவும் மற்றவர்களுடன் பழகும் வாய்ப்பும் உடையவர்களாகும்போது பிரச்னை எழுகிறது. தங்களது உரிமைகளை அவர்கள் கோரி, அவை மறுக்கப்பட்டால், அவர்கள் காவல்துறையை நாடுகிறார்கள். அந்த நாட்டுச் சட்டப்படி சட்டம் தனது கடமையைச் செய்கிறது.
இந்த விவரங்கள் எல்லாம் தெரிந்த இந்திய வெளிவிவகாரப் பணி அதிகாரியான தேவயானி கோப்ரகடே, சங்கீதா ரிச்சர்ட்டுக்கு உறுதியளித்ததுபோல சம்பளம் தராமல் போனதால்தான் அவர் வெளியேறி புகார் கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு வழக்கு நமக்கு எதிராகத் தொடுக்கப்படும் என்று தெரிந்து தில்லி உயர்நீதிமன்றத்தில் தேவயானி தடையும் பெற்றிருக்கிறார் என்றால், அவர் தெரிந்தே செய்திருக்கும் தவறு இது.
தூதரக ஊழியர்களுக்கு வியன்னா ஒப்பந்தத்தின் மூலம் தரப்பட்டிருக்கும் பாதுகாப்பும், விதிவிலக்குகளும் தூதுவர்களுக்குத் தரப்படுவதில்லை. தேவயானியை கைவிலங்கிட்டு கைது செய்தது வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் மீதான நடவடிக்கையை கேள்வி கேட்கும் அதிகாரம் நமக்கு இல்லை. அதேபோல, வெளிநாட்டிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும், ஊழியர்களும் வீட்டுவேலைகளுக்கு கொத்தடிமைகளை அழைத்துச் செல்வதைப்போல, உறவினர் என்று பொய்யான காரணம்கூறி, தங்களுக்கு வேண்டியவர்களை அழைத்துச் செல்வதை, அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது.
அமெரிக்க காவல்துறை கைவிலங்கிட்டது தவறு. தேவயானி மீதான குற்றச்சாட்டு உண்மையானால், அவர் செய்திருப்பது அதைவிடப் பெரிய தவறு.
Rishi- Posts : 5129
Join date : 2011-09-02
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum